2029 ஆம் ஆண்டிற்குள் ‘மெட்ரோ பஸ்’ சேவையை 500 ஆக உயர்த்த திட்டம்!
கொழும்புக்கு அப்பால் நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கும் மெட்ரோ பஸ் சேவையை விரிவுபடுத்தி, 2029 ஆம் ஆண்டிற்குள் அதன் எண்ணிக்கையை 500 ஆக அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 104 புதிய மெட்ரோ பஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளதுடன், அவை செப்டம்பர் மாதத்திற்குள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது சேவையில் உள்ள 10 பஸ்கள் மற்றும் ஜப்பானிடமிருந்து பெறப்பட்ட 7 பஸ்களுடன் இணைந்து, மொத்தம் 121 பஸ்களைக் கொண்டு “Colombo Metro Urban Luxury” சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த சேவையை கொழும்புடன் மட்டும் மட்டுப்படுத்தாமல், நாட்டின் பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளதாகவும், அதன்படி கொழும்புக்கு வெளியே யாழ்ப்பாணம் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் முதல் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்தி, வீதி நிர்மாணம் உள்ளிட்ட பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்யுமாறு அரச அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், “மக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை தாமதப்படுத்த யாருக்கும் உரிமையில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
