அர்ச்சுனாவின் ஆசனத்தை மாற்றக் கோரி சபாநாயகருக்கு கடிதம்!


பாராளுமன்றில் சுயேட்சைக் குழு உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் இருக்கையை மாற்றித் தருமாறு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சபாநாயகரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தமக்கு அருகில் அமர்ந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் சமூக ஊடகங்களிலும் தன்னை தொடர்ச்சியாக அவதூறாகப் பேசி வருவதாகவும், வன்முறை ரீதியான அச்சுறுத்தல்கள் மற்றும் இழிவான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு வருவதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

குறித்த உறுப்பினரின் நடத்தை அண்மைக்காலமாக மேலும் மோசமடைந்துள்ளதாகவும், அவர் அருகில் அமர்ந்திருப்பது தனது நாடாளுமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறாகவும் கவனச் சிதறலை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுயேட்சைக் குழுவிலிருந்து முதன்முறையாகத் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்குப் பின்னரே ஆசனங்கள் ஒதுக்கப்படுவது வழமையான நடைமுறை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், வழமையான நடைமுறைக்கு மாறாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையில் குறித்த உறுப்பினருக்கு ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், நாடாளுமன்ற மரபுக்கு அமைவாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி உறுப்பினர்களுக்குப் பின்னர் சுயேட்சை உறுப்பினர்களுக்கு ஆசனங்களை ஒதுக்கும் நடைமுறையைப் பின்பற்றி, வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் இருக்கையை மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரிடம் கோரியுள்ளார்.