நாட்டில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு – கொழும்பு, கம்பஹாவில் அதிக பாதிப்பு!
நாட்டில் எச்.ஐ.வி (HIV) தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக பாலியல் நோய்கள் தொடர்பான சமூக நிபுணர் வைத்தியர் சத்யா ஹெரத் தெரிவித்துள்ளார்.
இன்று (13) சுகாதார அமைச்சகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து அதிகளவிலான எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகி வருவதாகக் கூறினார்.
மேலும், 2023 ஆம் ஆண்டிலிருந்து எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதுடன், குறிப்பாக ஆண்களிடையே இந்தத் தொற்று அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள் எச்.ஐ.வி பரவுவதற்கான முக்கிய காரணமாக இருப்பதோடு, போதைப்பொருள் பயன்படுத்தும் போது ஊசிகள், சிரிஞ்சுகள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களை பகிர்ந்து பயன்படுத்துவதும் தொற்று பரவுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எச்.ஐ.வி தொற்றுக்கு தற்போது முழுமையான குணப்படுத்தும் சிகிச்சை இல்லையெனவும், தொற்று உறுதியானவர்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்பு மற்றும் மருந்து சிகிச்சையைப் பெற வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, எச்.ஐ.வி, பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் (STI) மற்றும் ஹெபடைடிஸ் போன்ற நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையமாகக் கொண்டு சிறப்பு நடமாடும் மருத்துவமனைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
