நாட்டில் 70,000-ஐ நெருங்கிய டெங்கு நோயாளர்கள்!
நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70,000-ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று (13) வரையில் மொத்தமாக 69,951 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த 12ஆம் திகதி வரை இந்த எண்ணிக்கை 68,672 ஆக இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 1,279 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மொத்த நோயாளர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு 33,127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாகப் பார்க்கும்போது, கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 14,464 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 14,004 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
மேலும், ஜூலை மாதத்தின் முதல் 13 நாட்களில் மட்டும் 14,572 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் மாத வாரியாகப் பதிவான நோயாளர்களில், ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 21,538 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
