காளான் வளர்ப்பாளர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்!


காளான் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில், விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் செயல்படும் விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், 250 காளான் வளர்ப்பு பைகளைக் கொண்ட ஒரு வளர்ப்புக் கூடத்தை 3 மாதங்களுக்கு காப்புறுதி செய்வதற்கான தவணைக் கட்டணம் சுமார் 2,025 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், நோய்கள் அல்லது பூச்சித் தாக்கங்களால் காளான் வளர்ப்பிற்கு சேதம் ஏற்பட்டால், 22,500 ரூபாய் வரை காப்புறுதி இழப்பீடு வழங்கப்படும்.

விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் காளான் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் இந்தக் காப்புறுதித் திட்டத்தில் இணைந்து பயன்பெற முடியும். பயிர்களுக்கு ஏற்படக்கூடிய எதிர்பாராத இழப்புகளிலிருந்து பாதுகாப்பு வழங்குவதும், காளான் வளர்ப்பை மேலும் பிரபலப்படுத்துவதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.