பிரதி மேயர், உப தவிசாளராக தெரிவாகும் அரச அதிகாரிகளுக்கு புதிய விடுமுறை நடைமுறை!


உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு பிரதி மேயர் அல்லது உப தவிசாளராகத் தெரிவு செய்யப்படும் அரசியல் உரிமைகளைக் கொண்ட அரச அதிகாரிகளுக்கு, சம்பளத்துடன் 6 நாட்கள் விடுமுறை அல்லது விருப்பத்தின் பேரில் சம்பளமற்ற விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, நிறுவன ஆணைக்கோவையின் XXXII ஆம் அத்தியாயத்தின் 2:3:4 உப பிரிவைத் திருத்தி வெளியிடப்பட்ட 2021 ஜூன் 25 ஆம் திகதியிட்ட 12/2021 இலக்க அரச நிர்வாகச் சுற்றறிக்கையில் மேலும் திருத்தம் செய்யப்பட்டு புதிய விதிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளன.

2026 ஜூன் 22 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதுடன், நிறுவன ஆணைக்கோவையின் XXXII ஆம் அத்தியாயத்தில் 2:3:4:1 என்ற புதிய உப பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதியின்படி, உள்ளூராட்சி மன்றத்தின் பிரதி மேயர் அல்லது உப தவிசாளராகத் தெரிவாகும் அரச அதிகாரி ஒருவர், வழக்கம்போல் சம்பளத்துடன் 6 நாட்கள் விடுமுறையைப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது, தனது விருப்பத்தின் பேரில் அந்தப் பதவிக் காலம் முழுவதும் சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தச் சுற்றறிக்கையை அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.