கிழக்கின் சுற்றுலா அபிவிருத்தி குறித்து ஆசிய நாடுகளின் தூதுவர்களுடன் மட்டக்களப்பில் முக்கிய பேச்சுவார்த்தை!


கிழக்கு மாகாணத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம், குறிப்பாக சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து ஆராயும் நோக்கில் மியன்மார், மலேசியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் இன்று (11) மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் செய்தனர்.

மட்டக்களப்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், தூதுவர்கள் பாரம்பரிய மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். இதன்போது, கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபை சார்பில், மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத் தளங்கள், அவற்றை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் மற்றும் மாநகரசபையின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குமாறு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் கோரிக்கை விடுத்தார்.

நிகழ்வின் நிறைவில், ஐந்து நாடுகளின் தூதுவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டதுடன், ஒவ்வொரு நாட்டிற்குமான தனித்தனி அபிவிருத்தித் திட்ட முன்மொழிவு அறிக்கைகளும் கையளிக்கப்பட்டன.

மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநகர ஆணையாளர் என். தனஞ்செயன், மாநகரசபை உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.