புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 'ரதவிரு' ஓய்வூதியத் திட்டம்!


வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய 'ரதவிரு' ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கருத்து தெரிவித்த அவர், இந்தத் திட்டத்தில் இணையும் தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்ற ஓய்வூதிய முறையைத் தெரிவு செய்யும் வசதி வழங்கப்படும் என்றார். அதன்படி, ஓய்வுக்குப் பின்னர் மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதா அல்லது பணிக்காலம் நிறைவடைந்ததும் மொத்தத் தொகையை ஒரே தடவையாக பெற்றுக்கொள்வதா என்பதை தொழிலாளர்களே தீர்மானிக்க முடியும்.

சட்டபூர்வமாக அனுப்பப்படும் வெளிநாட்டு பணப் பரிமாற்றங்களின் பதிவுகளை முறையாகப் பராமரித்து, ஓய்வூதியக் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து விசேட செயலி ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது.

மேலும், 'ரதவிரு' ஓய்வூதியத் திட்டத்திற்காக குவைத் நிதியம் ரூ.2.1 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்ட அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது சுமார் 17 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2025ஆம் ஆண்டில் நாட்டின் வரலாற்றிலேயே அதிகளவிலான வெளிநாட்டு பணவரவு பதிவாகியிருந்தது. இருப்பினும், தற்போது நடைமுறையில் உள்ள ஓய்வூதியத் திட்டத்தில் 307 தொழிலாளர்கள் மட்டுமே இணைந்துள்ளதால், அதனை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த புதிய தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இலங்கை மத்திய வங்கி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் கூட்டு முயற்சியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.