யாழில் 30க்கும் மேற்பட்ட யாசகர்கள் அகற்றப்பட்டுள்ளனர்; சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தியமையும் அம்பலம்!
யாழ்ப்பாண நகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 30க்கும் மேற்பட்ட யாசகர்கள் மற்றும் யாசகத்தின் பெயரில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண நகரின் சுத்தம், ஒழுங்கு மற்றும் சுற்றுலா நட்பு சூழலை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணக் கோட்டை சுற்றுவட்டம், மத்திய பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி மற்றும் போதனா வைத்தியசாலை பகுதிகளில் யாசகம் என்ற பெயரில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் மாநகர சபையின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் சொந்த இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சில சிறுவர்கள் யாசக நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டு வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், அவர்களின் பாதுகாவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உறுதிமொழி பெற்ற பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpeg.jpg)
