கட்டார் முன்னாள் அமீரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் ஹரிணி அமரசூரிய கட்டார் பயணம்!
கட்டார் நாட்டின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்கும், இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதற்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயமாக கட்டார் இராச்சியத்திற்குப் பயணித்துள்ளார்.
பிரதமர் இன்று (14) மாலை கட்டார் நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய கட்டார் இராச்சியத்தின் உயர்மட்ட தலைவர்களைச் சந்தித்து, இலங்கையின் இரங்கலைத் தெரிவிப்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளார்.
இந்த விஜயம், இலங்கை மற்றும் கட்டார் இடையிலான நெருக்கமான இருதரப்பு உறவுகளை பிரதிபலிப்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை தொடர்ந்தும் மேம்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களும் டோஹாவுக்குப் பயணித்துள்ளார். அங்கு அவர், கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை சந்தித்து, இலங்கை மக்களின் அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

