இலங்கையில் பயணிகள் ட்ரோன் விமான சேவை!


நாட்டின் வான்வழிப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் நோக்கில், பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ட்ரோன் விமான சேவையை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல, விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் ஆரம்ப கட்டத்தில் முன்னோடித் திட்டமாக (Pilot Project) நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த பயணிகள் ட்ரோன் விமானங்கள் ஒவ்வொன்றும் ஒரே நேரத்தில் ஆறு பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பயணிகள் ட்ரோன் போக்குவரத்து சேவைகள் ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறையில் உள்ள நிலையில், அவற்றின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கையிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னோடித் திட்டம் வெற்றிகரமாக அமையுமானால், இலங்கையின் எதிர்கால வான்வழிப் போக்குவரத்து முறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.