பார்சல் சேவையில் வந்த வாசனை சவர்க்காரத்தில் ஹெரோயின்!
யாழ்ப்பாணத்தில் பார்சல் சேவை மூலம் கொண்டுவரப்பட்ட வாசனை சவர்க்காரத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (9) இடம்பெற்றதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் இரகசியமாக போதைப்பொருள் விற்பனை இடம்பெற்று வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் உடுவில் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து வெளிநாட்டில் இருந்து பார்சல் சேவை மூலம் அனுப்பப்பட்ட வாசனை சவர்க்காரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர், கடந்த 2023ஆம் ஆண்டிலும், அதனைத் தொடர்ந்து கடந்த மாதமும் இதேபோன்ற சிறியளவிலான போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாண பொலிஸ் பிரிவில் இந்த வாரத்தில் மாத்திரம் போதைப்பொருளுடன் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
