இரத்தக்கறை படிந்த காரில் கூரிய வாள்களுடன் ஐவர் கைது!


யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று சித்திரவதை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐவர், கூரிய வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து இரு வாள்களும், சந்தேகத்திற்கிடமான காரொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 5ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் இளைஞர் ஒருவரை ஐவர் கொண்ட குழுவொன்று கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

கடத்தப்பட்ட இளைஞனை கைதடி பகுதிக்கு அழைத்துச் சென்ற குறித்த குழுவினர், அவரது ஆடைகளை அகற்றி சித்திரவதை செய்த பின்னர் காயங்களுடன் யாழ்ப்பாணம் பொஸ்கோ பாடசாலைக்கு அருகில் விட்டுச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, வேகமாக பயணித்த குறித்த காரை வீதிக் கடமையில் இருந்த பொலிஸார் நிறுத்த முற்பட்டபோதும், அது நிறுத்தாமல் சென்றுள்ளது. சந்தேகமடைந்த பொலிஸார் காரை துரத்திச் சென்று சோதனை செய்துள்ளனர்.

இதன்போது காருக்குள் இருந்து இரு கூரிய வாள்கள் கைப்பற்றப்பட்டதுடன், காரின் கதவு மற்றும் ஆசனங்களில் இரத்தக்கறைகள் காணப்பட்டதாகவும், இரத்தம் படிந்த சட்டை ஒன்றும் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 2.5 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்டதாக கூறப்படும் இளைஞன் தற்போது வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.