செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய ரோபோட்டிக் அறுவை சிகிச்சை: இலங்கை மருத்துவத் துறையில் புதிய சாதனை!
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததன் மூலம் இலங்கை மருத்துவத் துறை புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள Asiri Surgical Hospital மருத்துவமனையில், விசேட பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களால் நவீன ரோபோட்டிக் முறையை பயன்படுத்தி இரண்டு முக்கிய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில், 50 வயதுக்கு மேற்பட்ட பெண் ஒருவருக்கு கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சையும், மற்றுமொரு நோயாளிக்கு சிக்கலான சிறுநீரக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ நிபுணர்களின் தகவலின்படி, இந்த ரோபோட்டிக் முறைமை தானாகவே அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளாது. மாறாக, முழுமையாக அறுவை சிகிச்சை நிபுணரின் கட்டுப்பாட்டின் கீழேயே செயல்படுகிறது.
சிறப்பு கன்சோல் மூலம் மருத்துவர்கள் ரோபோட்டிக் கரங்களை இயக்குகின்றனர். மருத்துவரின் கை அசைவுகளை மிகத் துல்லியமாக பிரதிபலிக்கும் இந்த கருவிகள், மிகவும் நுணுக்கமான அறுவை சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகின்றன.
செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் இணைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த முறைமை, சிக்கலான அறுவை சிகிச்சைகளின் துல்லியத்தையும் பாதுகாப்பையும் அதிகரிக்க உதவுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ரோபோட்டிக் உதவியுடனான அறுவை சிகிச்சைகள் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக அசிரி அறுவை சிகிச்சை மருத்துவமனையின் தலைமை செயல்பாட்டு அதிகாரி வைத்தியர் சமந்தி டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறைந்த அளவிலான இரத்த இழப்பு, சிறிய வெட்டுக்களுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வசதி, தொற்று ஏற்படும் அபாயம் குறைதல், நோயாளிகள் விரைவாக குணமடைதல் மற்றும் அறுவை சிகிச்சை தொடர்பான சிக்கல்கள் குறைதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக் தொழில்நுட்பங்களின் பயன்பாடு இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் பல நவீன மருத்துவ சேவைகளுக்கு இது வழிவகுக்கும் எனவும் மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
