இலங்கையில் டெங்கு பாதிப்பு தீவிரம்: டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064 ஆக அதிகரிப்பு!


இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064 ஆக அதிகரித்துள்ளது.

இம்மாதத்தின் முதல் 9 நாட்களில் மாத்திரம் 10,685 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக மேல் மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதுவரை அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகி வந்த நிலையில், தற்போது கம்பஹா மாவட்டம் அதனை முந்தி அதிக பாதிப்புகள் பதிவாகிய மாவட்டமாக மாறியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 13,556 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், கொழும்பு மாவட்டத்தில் 13,355 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆண்டில் இதுவரை 46 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும், மொத்த நோயாளர்களில் 52 சதவீதத்துக்கும் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.

மாவட்ட மட்டத்தில் மிகக் குறைந்தளவான டெங்கு நோயாளர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு இதுவரை 40 பேர் மாத்திரமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு அபாயத்தை கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குருநாகல் மாவட்டத்தில் அதிக நோயாளர்கள் பதிவாகும் சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.