மேல் மாகாணத்தில் டெங்கு அபாயம் தீவிரம்; அடுத்த இரண்டு வாரங்களில் டெங்கு பரவல் மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டக்கூடும் என எச்சரிக்கை!


மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி கணிசமாக அதிகரித்துள்ளதால், எதிர்வரும் இரண்டு வாரங்கள் டெங்கு பரவல் மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

டெங்கு முகாமைத்துவ நிபுணர் குழு உறுப்பினரும் விசேட மருத்துவ நிபுணருமான ஆனந்த விஜேவிக்ரம, தற்போதைய டெங்கு பரவல் நிலைமை 2017 ஆம் ஆண்டு பதிவான கடுமையான டெங்கு பரவலை விடவும் மோசமான நிலையை அடையக்கூடும் என தெரிவித்துள்ளார்.

நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், மேல் மாகாண மருத்துவமனைகளின் கொள்ளளவு முழுமையாக நிரம்பியுள்ளதாகவும், சில மருத்துவமனைகளில் ஒரே கட்டிலில் இரண்டு அல்லது மூன்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பருவமழை மாற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக டெங்கு பரவல் அதிகரித்து வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார். அதிக வெப்பநிலை நிலவிய காலங்களில் நுளம்புகளின் இனப்பெருக்கம் குறைந்திருந்தாலும், தற்போது நிலைமை மீண்டும் கவலைக்கிடமானதாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் இதுவரை 66,064 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் மட்டும் 10,685 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.