நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு மரணத்திற்குப் பிந்தைய பதவி உயர்வு!


நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மரணத்திற்குப் பிந்தைய பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 21 கைதிகளும் உயிரிழந்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நீர்கொழும்பு மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட 29 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலம் வழங்கிய கைதிகள் அனைவரும், தாங்கள் கட்டுவெல்லேகம சுரேஷின் தரப்பினரால் தாக்கப்பட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். அதேவேளை, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இதனிடையே, உயிரிழந்த இரண்டாம் நிலை சிறைச்சாலை அதிகாரி எஸ்.எச்.எஸ். சந்திரவன்ச முதல் நிலை சிறைச்சாலை அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளதுடன், உயிரிழந்த ஏனைய சிறைச்சாலை காவலர்களும் சார்ஜன்ட் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.