பயனற்ற அரச நிறுவனங்களை மூட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிரடி உத்தரவு!
பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனளிக்காத அனைத்து அரச நிறுவனங்களையும் மூடுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஒரே அமைச்சின் கீழும், வெவ்வேறு அமைச்சுகளின் கீழும் ஒரே நோக்கத்துடன் பல அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு எடுத்துக்காட்டாக, இலங்கை உரக் கூட்டுத்தாபனம் செயற்பாட்டில் இருந்தபோதும், எப்பாவல பொஸ்பேட் நிறுவனம் தனியாக உருவாக்கப்பட்டமை குறிப்பிடப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு தேவைகள் மற்றும் நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட இந்நிறுவனங்களை தொடர்ந்து பராமரிப்பதால் அரசாங்கத்திற்கு தேவையற்ற நிதிச் சுமை ஏற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் ஒரே பணிக்காக பல நிறுவனங்கள் இயங்குவதால் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் செயல்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் அடையாளம் கண்டு அவற்றை மூடுவதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
