மதுவரி அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.2.75 கோடி மோசடி: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது!


மதுவரி அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாகக் கூறி 2 கோடியே 75 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

வீரகெட்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து 27,500,000 ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், அதன் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன்படி, நேற்றைய தினம் (14) காலை ஹங்குரன்கெத்த பகுதியில் வைத்து 58 வயதுடைய ஜெயலத் பண்டார திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரை இன்று (15) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.