இளம்வயதுக் கர்ப்பங்கள் மற்றும் எச்ஐவி பரவலைத் தடுக்க வயதுக்கேற்ற அறிவியல் ரீதியான பாலியல் கல்வி அவசியம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
கடந்த 2025ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கையில் 8,700 இளம்வயதுக் கர்ப்பங்கள் பதிவாகியுள்ளதுடன், 874 எச்ஐவி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அவர்களில் 107 பேர் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்காக வயதுக்கேற்ற அறிவியல் ரீதியான பாலியல் கல்வியை வழங்குவது அவசியம் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய பாலியல் கல்வி வழிகாட்டல்கள் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள மூன்று வழிகாட்டி பிரசுரங்களும் வெறும் ஆவணங்கள் அல்ல என்றும், அவை பிள்ளைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான அடித்தளமாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.
ஸ்வீடன், நெதர்லாந்து போன்ற நாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே இத்தகைய அறிவியல் அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், இலங்கையில் இந்த நடவடிக்கைகள் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த ஆண்டு பொலிஸ் நிலையங்களில் 10,455 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதேவேளை முறைப்பாடுகள் செய்யப்படாத பல சம்பவங்கள் சமூகத்தில் இடம்பெறக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பிள்ளைகளின் உடலில் ஏற்படும் ஹோர்மோன் மாற்றங்களினால் உருவாகும் சமூகத் தொடர்புகளை முற்றிலும் தடுக்க முடியாது எனவும், அதற்கு பதிலாக அவர்களுக்கு சரியான விழிப்புணர்வு மற்றும் அறிவை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
போதிய விழிப்புணர்வு இல்லாமையே சிறுவர் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட பல சமூகப் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைவதாகவும், இதனைத் தடுப்பது அனைவரினதும் பொறுப்பு எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வயதுக்கேற்ற பாலியல் கல்வி தொடர்பில் உலகளவில் பல்வேறு சவால்கள் காணப்பட்டாலும், அவற்றுக்கு அறிவியல் ரீதியான தீர்வுகள் உள்ளதாகவும், இதனை அரசியல் நோக்கமோ அல்லது ஊடகக் காட்சியோ அல்லாமல் தேசியப் பொறுப்பாக முன்னெடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
