வடக்கு - கிழக்கில் இன்று அதிகரிக்கும் வெப்பநிலை: எல்நினோ தாக்கம் ஆரம்பம்; ஜூலை இறுதியில் தீவிர பாதிப்பு என எச்சரிக்கை!


பசிபிக் பிராந்தியத்தில் உருவாகியுள்ள எல்நினோவின் தாக்கம் தற்போது படிப்படியாக இலங்கையில் உணரப்படத் தொடங்கியுள்ளது. ஜூலை மாத இறுதிக்குள் இதன் தாக்கம் மேலும் தீவிரமடையக்கூடும் என வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எல்நினோவின் தாக்கம் தெளிவாக உணரப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் அதிகரிக்கும் என்பதால், பகல் நேரங்களில் வழக்கத்தை விட அதிக வெப்பத்தை மக்கள் உணரக்கூடும்.

அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்நினோவின் தாக்கத்தால் நீர் ஆவியாக்கம் அதிகரித்து, நீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் காணப்படுவதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, அதிக வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், போதிய அளவு நீர் அருந்தவும், தேவையற்ற வெளிப்புறச் செயல்பாடுகளைத் தவிர்க்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.