நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு தற்காலிக இடமாற்றம்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரி, பல்லேகல சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 6 ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது, கைதிகள் சிறைச்சாலையின் இறுதி பாதுகாப்பு மரக் கதவையும் உடைத்துக்கொண்டு வெளியேற முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சந்தர்ப்பத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த சிறைச்சாலை அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தார்.
சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், கைதிகள் குழுவொன்று சிறைச்சாலை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியிருந்தமை தெரியவந்துள்ளது. அதிகாரிகளின் உயிரைப் பாதுகாப்பதற்கும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், இந்தத் துப்பாக்கிச் சூடு சிறைச்சாலை சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டதா அல்லது அதிகார வரம்பை மீறி இடம்பெற்றதா என்பதை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, இந்த வன்முறைச் சம்பவத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
.webp)