யாழ்ப்பாணம் சிறைச்சாலை மேல் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு; இயக்கியவர் கைது!


யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேல் அடையாளம் காணப்படாத ட்ரோன் ஒன்று பறந்ததால் நேற்று மாலை சிறைச்சாலை நிர்வாகத்தினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று மாலை சுமார் 5.00 மணியளவில் சிறைச்சாலையின் மேற்பகுதியில் சில நிமிடங்கள் ட்ரோன் வட்டமிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதனை அதிகாரிகள் அவதானிக்கும் முன்பே ட்ரோன் அங்கிருந்து பறந்துச் சென்றது.

இதையடுத்து, ட்ரோனை இயக்கியவரை கண்டறியுமாறு சிறைச்சாலை நிர்வாகம் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன், சிறைச்சாலையின் பாதுகாப்பும் உடனடியாக பலப்படுத்தப்பட்டது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் பாலங்களை கண்காணிப்பதற்காக அனுமதி பெற்று இயக்கப்பட்ட ட்ரோனே அது என்பது தெரியவந்தது.

எனினும், சிறைச்சாலையின் மேற்பகுதியில் ட்ரோனை இயக்கியமை தொடர்பாக, அதனை இயக்கிய நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.