உலகின் சிறந்த உணவு சுற்றுலா தலங்கள் பட்டியலில் இலங்கைக்கு சர்வதேச அங்கீகாரம்!
2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 50 உணவு சுற்றுலா தலங்கள் பட்டியலை டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட் (Travel And Tour World) நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இலங்கை 50ஆவது இடத்தைப் பெற்று சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் மெக்சிகோ முதலிடத்தையும், இத்தாலி இரண்டாம் இடத்தையும், ஸ்பெயின் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
உணவுக் கலாசார பாரம்பரியம், பிராந்திய உணவு வகைகளின் பல்வகைமை, தெரு உணவுக் கலாசாரம், உள்ளூர் மூலப்பொருட்களின் பயன்பாடு, உயர்தர உணவுகள், நிலைத்தன்மை மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் தனித்துவமான உணவு அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது.
நறுமணப் பொருட்கள், பாரம்பரிய சமையல் முறைகள் மற்றும் பல்வேறு கலாசாரங்களின் உணவு மரபுகள் காரணமாக, இலங்கை உலகின் சிறந்த உணவு சுற்றுலா நாடுகளில் ஒன்றாகத் திகழ்வதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் உணவை சுவைக்கச் சிறந்த 10 இடங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவை:
கொழும்பு, காலி, கண்டி, நீர்கொழும்பு, எல்ல, யாழ்ப்பாணம், மிரிஸ்ஸ, நுவரெலியா, ஹிக்கடுவ மற்றும் திருகோணமலை.
கொழும்பு சோறு மற்றும் கறி, கொத்து ரொட்டி, ஆப்பம், புதிய கடல் உணவுகள் ஆகியவற்றுக்கு புகழ்பெற்றதாகவும், காலி மற்றும் நீர்கொழும்பு கடல் உணவுகளுக்கான சிறந்த இடங்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, கண்டி பாரம்பரிய இலங்கை உணவுகளுக்கும், யாழ்ப்பாணம் தனித்துவமான தமிழ் உணவுகளுக்கும், எல்ல உள்ளூர் மூலப்பொருட்களால் தயாரிக்கப்படும் உணவுகளுக்கும், நுவரெலியா தேநீர் சார்ந்த உணவுகள் மற்றும் இனிப்பு வகைகளுக்கும், மிரிஸ்ஸ, ஹிக்கடுவ மற்றும் திருகோணமலை புதிய கடல் உணவுகளுக்கும் சிறப்புப் பெற்ற உணவு சுற்றுலா தலங்களாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
