நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு – ஒரே நாளில் 601 புதிய நோயாளர்கள் அடையாளம்!


நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அப்பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, நேற்று (12) வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் மொத்தம் 68,672 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த 11 ஆம் திகதி வரை 68,071 நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 601 புதிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெங்கு பாதிப்பில் மேல் மாகாணம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு மட்டும் 36,118 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 14,112 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 13,791 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஜூலை மாதத்தின் முதல் 12 நாட்களிலேயே 13,293 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த ஆண்டில் அதிகளவான பாதிப்புகள் ஜூன் மாதத்தில் பதிவாகியுள்ளதுடன், அப்போது மட்டும் 21,538 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை டெங்கு நோயால் 47 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.