முன்பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிவிக்குமாறு அமைச்சர் வேண்டுகோள்!


நாட்டில் டெங்கு அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், டெங்கு நுளம்புகளிடமிருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கில், முன்பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு கைகளையும் கால்களையும் முழுமையாக மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அணிவிப்பதை உறுதி செய்யுமாறு பெற்றோருக்கு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கைகளையும் கால்களையும் மறைக்கும் ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்குச் செல்ல மாணவர்களுக்கு அனுமதி வழங்க கல்வி அமைச்சு அண்மையில் தீர்மானித்துள்ளது.

அதேபோன்று, முன்பள்ளிச் சிறார்களையும் டெங்கு நுளம்புக் கடியிலிருந்து பாதுகாக்கும் வகையில், அவர்களை முன்பள்ளிக்கு அனுப்புவதற்கு முன் முழுக் கைகளையும் கால்களையும் மறைக்கும் பாதுகாப்பான ஆடைகளை அணிவிக்குமாறு பெற்றோரிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்த நடவடிக்கையின் மூலம் நுளம்புக் கடியால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து, சிறுவர்களிடையே டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.