நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: சுயாதீன விசாரணை அவசியம் என ஐ.நா வலியுறுத்தல்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகளில் கைதிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், மோதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட பலரின் குடும்பங்களுக்கு உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்றும், சம்பவத்திற்கான பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க அதிகாரிகள் உறுதியளித்துள்ளதை வரவேற்றுள்ள ஐ.நா., அந்த விசாரணைகள் உடனடியாகவும், சுயாதீனமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இடம்பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான வன்முறைகள் இலங்கையின் தடுப்புக்காவல் மையங்களில் காணப்படும் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக வழக்கு விசாரணைகளின்றி விளக்கமறியலில் வைக்கப்படுதல், சிறைச்சாலைகளில் காணப்படும் அதிக நெரிசல் மற்றும் போதிய வசதியின்மை போன்ற குறைபாடுகள் இப்பிரச்சினைகளுக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் அதிகளவானோர் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்குவதற்குப் பதிலாக சுகாதாரம் சார்ந்த புனர்வாழ்வு அணுகுமுறைகள் வழங்கப்பட வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், நீர்கொழும்பு சிறைச்சாலை மற்றும் மாற்றப்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய சிறைச்சாலைகள், தடுப்புக்காவல் மையங்கள் ஆகியவற்றை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் தடையின்றி பார்வையிடுவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாற்றப்பட்ட கைதிகள் சித்திரவதைகள் மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா. ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
