யாழ். உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை: பிற்பகல் 2 மணிக்குப் பின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!


நாட்டில் நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘வெப்ப எச்சரிக்கை’ (Heat Advisory) விடுத்துள்ளது.

இந்த மாவட்டங்களில் பகல் நேரங்களில் மனித உடல் உணரும் வெப்பத்தின் அளவு (Heat Index) வழக்கத்தை விட அதிகரித்து, ‘எச்சரிக்கை’ மட்டத்தை எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், போதியளவு தண்ணீர் அருந்துதல், நேரடி வெயிலில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்த்தல் மற்றும் கடுமையான வெளிப்புற வேலைகளை பகல் நேரங்களில் குறைத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (10) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், மொனராகலை, புத்தளம், அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கம் மற்றும் திடீர் பலத்த காற்று காரணமாக ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.