இலங்கையர்களுக்கான சுற்றுலா விசா விண்ணப்பங்களை நிறுத்திய தைவான்!
தைவான் (சீனக் குடியரசு) அரசின் புதிய விசா கொள்கைக்கு அமைவாக, இலங்கைப் பிரஜைகளிடமிருந்து சுற்றுலா விசா விண்ணப்பங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இனி ஏற்கப்படமாட்டாது என தைவான் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும், தைவான் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பயணம் செய்வோர், கலாசார மற்றும் பரிமாற்ற நிகழ்வுகளில் பங்கேற்போர், மூன்றாம் தலைமுறை வரையிலான உறவினர்களைச் சந்திப்போர், வணிகப் பயணிகள், தைவானில் கப்பலில் பணியில் சேருபவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காகச் செல்பவர்கள் ஆகியோருக்கு விசா விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த வகை விசா விண்ணப்பங்கள் சென்னையில் உள்ள தைப்பே பொருளாதார மற்றும் கலாசார மையம் (Taipei Economic and Cultural Center) அல்லது சிங்கப்பூரிலுள்ள தைப்பே பிரதிநிதி அலுவலகம் (Taipei Representative Office) ஊடாக பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள், தைவானில் உள்ள உத்தரவாதம் அளிப்பவரின் ஆவணங்கள், உத்தரவாதக் கடிதம், தைவான் தேசிய அடையாள அட்டையின் நகல், கடவுச்சீட்டின் விவரப் பக்க நகல், பொலிஸ் அனுமதிச் சான்றிதழ், நிதி வசதிக்கான ஆதாரம், தங்குமிட உறுதிப்படுத்தல் மற்றும் திரும்பும் விமானப் பயணச்சீட்டு உள்ளிட்ட அனைத்து கட்டாய ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
தேவையான அனைத்து ஆவணங்களும் முழுமையாகத் தயாராக இருப்பதை உறுதி செய்த பின்னரே விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு தைவான் வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
