கொழும்பில் சர்வதேச மும்மொழி இலக்கிய விழா ஆரம்பம் – சஷி தரூர் பங்கேற்பு!


இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான சஷி தரூர், கொழும்பில் ஆரம்பமாகியுள்ள சர்வதேச மும்மொழி இலக்கிய விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டார்.

இலங்கையின் முதல் சர்வதேச மும்மொழி இலக்கிய விழாவாகக் கருதப்படும் இந்த நிகழ்வு, நேற்று (24) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமானது. இதில் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இலக்கிய விழா, சர்வதேச மற்றும் உள்நாட்டு எழுத்தாளர்கள், கவிஞர்கள், கல்வியாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் வாசகர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது.

இலங்கையின் இலக்கிய அடையாளத்தை சர்வதேச அரங்கில் மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த விழா முக்கிய பங்களிப்பை வழங்கும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

எதிர்வரும் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த இலக்கிய விழாவில் இலக்கிய கலந்துரையாடல்கள், நூல் வெளியீடுகள், படைப்பாற்றல் செயலமர்வுகள், திரைப்படத் திரையிடல்கள், கலாசார நிகழ்வுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறவுள்ளன.