இலங்கை மக்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து பெறப்படும் கடன்கள் அதிகரிப்பு!
இலங்கை மக்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன்களின் அளவு சுமார் 351.45 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளியியல் திணைக்களப் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.
இந்த அதிகரிப்பு சதவீத அடிப்படையில் சுமார் 54 சதவீதமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2024 ஆம் ஆண்டில், தங்க நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் மொத்த பெறுமதி 660 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்ததாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில், வர்த்தக வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களின் அளவு 101.1 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நாட்டில் அன்றாட செலவுகளுக்கான பணத் தேவை அதிகரித்துள்ளமைக்கு பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்க நிலைமைகளே முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நகைகளை அடமானம் வைப்பது அல்லது விற்பனை செய்வது அதிகரித்துள்ளதன் காரணமாக, நாட்டிலுள்ள 60 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்களில் தங்க நகைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக நிதி நிறுவன அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
