தாதியர்களின் ஓய்வு வயதெல்லையை 2 வருடங்களால் நீடிக்க கோரிக்கை!


நாட்டில் நிலவும் கடுமையான தாதியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில், ஓய்வு பெறவுள்ள தாதியர்களின் பணிக்காலத்தை மேலும் இரண்டு வருடங்களால் நீடிக்குமாறு அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான கடிதமொன்றை சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நேற்று (14) ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000ஐ கடந்துள்ளதாகவும், வீடுகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களை கணக்கில் எடுத்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களைப் பராமரிப்பதற்குத் தேவையான தாதியர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் புதிய தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுத்தாலும், அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கி சேவையில் இணைப்பதற்கு சுமார் மூன்று ஆண்டுகள் தேவைப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய தாதியர் பற்றாக்குறையால், ஒரு தாதியர் மூன்று பேரின் பணிச்சுமையை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதிக பணிச்சுமை காரணமாக தாதியர்களும் நோய்வாய்ப்படும் அபாயம் உள்ளதாகவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த நெருக்கடியைத் தணிக்கும் வகையில் ஓய்வு பெறவுள்ள தாதியர்களின் சேவை வயதெல்லையை இரண்டு வருடங்களால் நீடிப்பதற்கு ஜனாதிபதி விசேட கவனம் செலுத்த வேண்டும் என அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.