16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகப் பாவனையைக் குறைக்க அரசு திட்டம்: பிரதமர்!
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (08) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தேசிய வழிகாட்டல் கட்டமைப்பை உருவாக்குவதுடன், குழந்தைகளின் மனநலத்தை மேம்படுத்தும் வகையில் "மூளை ஆரோக்கியம்" என்ற கருத்தை மையமாகக் கொண்ட தேசிய அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் முன்னெடுக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் இந்த முன்னோடித் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறினார்.
பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டங்களின் அனுபவங்கள் நேர்மறையான பலன்களை அளித்துள்ளதாகவும், இது அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களைத் தடை செய்வதன் மூலம் மட்டும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்றும், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சமூக ஊடகங்களைப் பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவது தொடர்பாக நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று, இந்த ஆண்டுக்குள் அமைச்சரவையில் முன்மொழிவை சமர்ப்பித்து, நாட்டிற்குப் பொருத்தமான நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
