காதலிக்கு நண்பர்களுடன் சேர்ந்து காதலன் அரங்கேற்றிய கொடூரம்!


கண்டி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது காதலனைச் சந்திப்பதற்காக மாத்தளை மாவட்டத்தின் வில்முவா பகுதிக்கு சென்றிருந்த நிலையில், காதலன் மற்றும் மேலும் மூவர் இணைந்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

விசாரணைகளின்படி, குறித்த பெண் காதலனால் நண்பருக்குச் சொந்தமான மூன்று மாடி வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு முதலில் காதலன் அவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. பின்னர், காதலன் தொலைபேசி மூலம் அழைத்த மேலும் மூவர் அவர்மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களில் காதலனுக்கு 33 வயதும், மற்றவர்களுக்கு 37 முதல் 55 வயது வரையிலான வயதுகளும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற போது சந்தேகநபர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னர், பாதிக்கப்பட்ட பெண் மற்றொரு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இரண்டாவது சம்பவம் இடம்பெற்ற வீட்டின் பராமரிப்பாளரும் சந்தேகநபர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அடுத்த நாள் அங்கிருந்து தப்பிச் சென்ற பெண் பேருந்து மூலம் கண்டிக்குச் சென்றுள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் உடதும்பர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். மருத்துவ பரிசோதனையின் பின்னர் சம்பவம் தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரியிடம் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்ட உடதும்பர பொலிஸார், மேலதிக நடவடிக்கைக்காக வழக்கை வில்முவா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து நடவடிக்கை எடுத்த பொலிஸார் நான்கு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளதுடன், அவர்கள் நாவுல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.