பசில் ராஜபக்சவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு!
சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சட்டவிரோத சொத்துக்கள் பிரிவிற்கு, கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (17) இந்த உத்தரவை வழங்கியுள்ளார். நிதி முறைகேடு தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் கலிங்க இந்ததிஸ்ஸ, மூன்றாவது சந்தேகநபர் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 127-வது பிரிவின் கீழ் இரகசிய வாக்குமூலம் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 7.8 மில்லியன் நிதியை அதன் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தாமல், ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக 12,000 டி-ஷர்ட்கள் அச்சிட பயன்படுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் காவலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் (SLTPB) முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜாஃபருக்கு, தலா ரூ. 10 இலட்சம் மதிப்பிலான இரண்டு சரீர பிணைகள் வழங்கப்பட்டதுடன், அவர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் சந்தேகநபர்கள் மீது பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
மேலும் விசாரணையின் போது, குறித்த சம்பவம் தொடர்பில் மூன்றாவது சந்தேகநபரின் நிலை குறித்து நீதவான் குற்றப்புலனாய்வுத் துறையிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு அரச சட்ட ஆலோசகரின் அறிவுறுத்தல்கள் இன்னும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தின் மூன்றாவது சந்தேகநபரான நிர்வாக பணிப்பாளரும், ‘பி’ அறிக்கையில் பெயரிடப்பட்ட நிதி பணிப்பாளரும் சம்பவத்துடன் தொடர்புடைய ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, நிதி பணிப்பாளர் இன்னும் கைது செய்யப்படாத காரணத்தால், மூன்றாவது சந்தேகநபருக்கு பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ரூமி ஜாஃபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், வழக்கு அடுத்ததாக அக்டோபர் 14 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஸ்வர குணவர்தனவும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
