பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்!
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரம்) மற்றும் கல்விப் பொதுத் தராதர (உயர்தரம்) பரீட்சைகள் முன்னதாக அறிவிக்கப்பட்ட தவணை அட்டவணையின்படி திட்டமிட்ட திகதிகளில் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025.09.11 ஆம் திகதியிட்ட 30/2025 இலக்க சுற்றறிக்கையும், பாடசாலைப் பரீட்சைத் திகதிகள் தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் 2025.07.09 ஆம் திகதியிட்ட 6/1/2025 இலக்க சுற்றறிக்கையும் அடிப்படையாகக் கொண்டு பரீட்சைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பரீட்சைகளுக்குரிய பாடத்திட்டங்கள் முழுமையாக கற்பித்து முடிக்கப்பட்டு, மாணவர்கள் உரிய முறையில் பரீட்சைகளுக்குத் தயார்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஏதேனும் பாடசாலைகளில் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் தாமதம் ஏற்பட்டிருந்தால், முன்கூட்டியே திட்டமிட்டு மேலதிக நேரங்களை ஒதுக்கி பாடத்திட்டங்களை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய கடிதம் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
