வளைகுடாவில் மீண்டும் பதற்றம் ; குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்!


குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தின் மீது இன்று (3) ஈரானின் ஆளில்லா விமானத் தாக்குதல் இடம்பெற்றதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தாக்குதலைத் தொடர்ந்து குவைத் அதிகாரிகள் விமானப் போக்குவரத்தை உடனடியாக நிறுத்தியுள்ளனர். தற்போது விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், அங்கு வருகை தந்த விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.

குவைத் பொதுச் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையை மேற்கோள் காட்டி வெளியான தகவல்களின்படி, விமான நிலையத்தின் ‘டி1’ முனைய கட்டடத்திற்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் சவுத் அப்துல்அஜிஸ் அல்-ஒதைபி இந்த தாக்குதலை “கட்டிடத்திற்கு குறிப்பிடத்தக்க சேதத்தையும் காயங்களையும் ஏற்படுத்திய ஈரானின் குற்றவியல் நடவடிக்கை” என விவரித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் காரணமாக வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.