இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த பௌத்த தேரர் கைது!
14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 41 வயதுடைய பௌத்த தேரர் ஒருவர் அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுகந்த கம பகுதியில் அமைந்துள்ள விகாரையில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விகாரையில் தங்கியிருந்த ஐந்து இளம் பிக்குகளில் மூன்று பேர் அண்மையில் தப்பிச் சென்ற நிலையில், சந்தேகங்கள் எழுந்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்திற்கு தயாரான நிலையில் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து விகாரையில் இருந்த மேலும் இரண்டு இளம் பிக்குகள் பொலிஸாரால் வாக்குமூலம் பெறுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்போது சந்தேக நபரான 41 வயதுடைய தேரர் தீகவாபி பிரதேசத்திற்கு தப்பிச் சென்றிருந்தார்.
பின்னர் மற்றொரு பௌத்த பிக்குவுடன் இணைந்து, அவர் தீகவாபி பகுதியில் இருந்து மத்திய முகாம் பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய இளம் பிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (3) அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
