இலங்கையர்களிடையே அதிகமாகப் பதிவாகாத புதிய வகை திரிபுகளுடன் பரவும் டெங்கு நோய்!
இலங்கையில் தற்போது பரவி வரும் டெங்கு வைரஸ், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் மரபணு மாற்றமடைந்த புதிய வகை வைரஸாகக் காணப்படுவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் ஹம்சக்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.
நேற்று (14) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனை தெரிவித்தார். இதுவரை இலங்கையர்களிடையே அதிகமாகப் பதிவாகாத புதிய வகை டெங்கு திரிபு தற்போது பரவி வருவதால், நோய் பரவல் தன்மையிலும் சவால்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த புதிய வைரஸுக்கு எதிராக பொதுமக்களின் உடலில் போதுமான நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாதிருக்கக்கூடும் என்பதால், நோய் வேகமாகவும் அதிகமானோரிடமும் பரவும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியத்தை அரசாங்கம் முன்கூட்டியே எதிர்பார்த்திருந்தாலும், இம்முறை பரவி வரும் வைரஸின் இயல்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் முழு அளவில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுதல், அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் தீவிர நிலைக்கு செல்லாமல் பாதுகாத்து முழுமையாக குணமடையச் செய்வது ஆகிய இரண்டு முக்கிய நோக்கங்களுடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருந்து நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அனைவரும் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
