16 வயது மாணவியை பல ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிரபல ஆங்கில ஆசிரியர் கைது!
மொரட்டுமுல்லை, புவக்கரம்ப சந்திப்பில் தனியார் வகுப்புகள் நடத்தி வந்த பிரபல ஆங்கில ஆசிரியர் ஒருவர், 16 வயது மாணவியை பல ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மொரட்டுவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
07 ஆம் வகுப்பிலிருந்தே குறித்த வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவியை சந்தேகநபர் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்ததுடன், இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் தீங்கு விளைவிப்பதாக மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பயத்தின் காரணமாக இதுவரை சம்பவத்தை வெளிப்படுத்தாமல் இருந்த மாணவி, இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது தோழியிடம் இதனை தெரிவித்துள்ளார். பின்னர் தோழியின் தாயாரின் தலையீட்டில் காவல்துறையில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குறித்த வகுப்பு மையத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், மருத்துவ பரிசோதனைக்காக மாணவி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்ற சம்பவங்களில் மேலும் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது தொடர்பில் கல்கிஸ்ஸ மற்றும் மொரட்டுவை உதவி காவல் கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
