பறிபோகும் தமிழர் வழிபாட்டிடம்!


முல்லைத்தீவு குருந்தூர்மலையில் இந்து கோவில் இருந்ததற்கான எவ்வித தொல்பொருள் சான்றுகளும் இதுவரை கண்டறியப்படவில்லை என பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ. செனரத் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு, மேலதிக செயலாளர் (நிர்வாகம்) தேசிய மரபுரிமைகள் பிரிவின் ஊடாக அனுப்பியுள்ள அறிவிப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குருந்தூர்மலை விகாரையின் மறுசீரமைப்பு என்ற பெயரில் ஐயனார் கோவிலை புனரமைக்க முயற்சிப்பதாகக் கூறி கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் மேற்கண்ட விளக்கம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2026 மார்ச் 30ஆம் திகதி முல்லைத்தீவு பிரதேச செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், குருந்தூர்மலை விகாரை அமைந்துள்ள பகுதி வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த சான்றுகளைக் கொண்ட தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு இந்து கோவில் இருந்ததற்கான எந்தவொரு சான்றும் வெளிப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, 1940ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் 33ஆம் பிரிவின்படி, தொல்பொருள் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பிற்குள் புதிய கட்டடங்கள் அல்லது நிர்மாணப் பணிகளை மேற்கொள்வது சட்டவிரோதமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது 34ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பௌத்த மதத் தலமாகக் கருதப்படும் பகுதியில் இந்து கோவிலை நிர்மாணிப்பது அல்லது புனரமைப்பது, ஒரு மதக் குழுவினரின் உணர்வுகளைத் தூண்டும் செயலாகக் கருதப்படக்கூடும் என்றும், அது தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் 31(ஆ) பிரிவின் கீழ் குற்றமாக அமையலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், குறித்த பகுதியில் இந்து கோவிலை நிர்மாணிப்பதற்கோ அல்லது புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கோ அனுமதி வழங்க முடியாது என தொல்பொருள் திணைக்களம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, குருந்தூர்மலையில் அமைந்துள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயம் தமிழ் மக்களின் பாரம்பரிய வழிபாட்டுத் தலமாக நீண்டகாலமாக இருந்து வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். அங்கு ஆண்டுதோறும் பொங்கல் உள்ளிட்ட மத வழிபாடுகள் நடத்தப்பட்டு வருவதும் அப்பகுதி மக்களின் மரபு வழக்கமாக இருந்து வருகிறது.

2018ஆம் ஆண்டு, பௌத்த பிக்கு ஒருவர் இராணுவத்தின் உதவியுடன் அங்கு புத்தர் சிலை நிறுவ முயன்றதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு எதிராக உள்ளூர் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதையடுத்து, விவகாரம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வழக்காக மாறியது.

குறித்த இடத்தில் புராதன பௌத்த விகாரை ஒன்று இருந்ததாகக் கூறி புதிய விகாரை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், எந்தத் தரப்பினரும் அப்பகுதியில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது என்ற தடையும் அமலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.