குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சுரேஷ் சலே மற்றும் கோட்டாபய உள்ளிட்ட எவராக இருந்தாலும் சிறைக்கு செல்ல தயாராக வேண்டும்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட எவராக இருந்தாலும், அவர்கள்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் சட்டத்தின் முன் பொறுப்பேற்று சிறைக்கு செல்லத் தயாராக இருக்க வேண்டும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற தேசிய ஏற்றுமதி திட்டம் 2026 – 2030 உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
சுரேஷ் சலே தொடர்பான கைது நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் சட்டப்படி முன்னெடுக்கப்படுவதாகவும், நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமானதாக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், தன்னை கைது செய்ய வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்தாலும், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகளில் தவறுகள் உறுதி செய்யப்பட்டால் சட்டத்தின் முன் எந்தவித விசேட சலுகைகளும் வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.
அத்துடன், சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் தங்களின் நிரபராதித் தன்மையை நிரூபிக்கத் தவறினால், அதற்கான சட்ட விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
சுரேஷ் சலேவின் பாதுகாப்பு குறித்து கருத்து வெளியிடுபவர்கள் சிலர், அவருக்கான அக்கறையால் அல்லாது எதிர்கால சட்ட நடவடிக்கைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கத்திலேயே செயற்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
