இளம் யுவதி வாயில் இரத்தக் கறைகளுடன் மர்மமான முறையில் உயிரிழப்பு - விசாரணை தீவிரம்!


கண்டி மாவட்டத்தின் பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 22 வயதுடைய இளம் யுவதி ஒருவர் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று (17) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் பன்வில பகுதியைச் சேர்ந்த இளம் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தகவல்களின்படி, நேற்று மாலை அவரது பெற்றோர் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், குறித்த யுவதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். பின்னர் இரவு வீடு திரும்பிய பெற்றோர், மகளை கட்டிலில் உயிரிழந்த நிலையில் கண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்தில் சடலம் மீட்கப்பட்டபோது, உயிரிழந்தவரின் வாய்ப்பகுதியில் இருந்து இரத்தம் வெளியேறியிருந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் மரண காரணம் தொடர்பில் சந்தேக நிலை காணப்படுவதால், பொலிஸார் மற்றும் தடயவியல் அதிகாரிகள் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், உயிரிழப்பிற்கான துல்லியமான காரணத்தை கண்டறிவதற்காக சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.