காதலை நிராகரித்த இளம் பெண் அயல் வீட்டு இளைஞனால் கொடூரமாகக் கொலை!
பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகிரியை பகுதியில் 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், தனியார் வங்கியொன்றில் பணியாற்றி வந்த இளம் பெண்ணே உயிரிழந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸ் தகவல்களின்படி, அயல் வீட்டில் வசித்து வந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர் நீண்டகாலமாக குறித்த பெண்ணை காதலித்து வந்ததாகவும், ஆனால் அவரது காதலை பெண் தொடர்ந்து நிராகரித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னணியில் ஏற்பட்ட விரக்தியால், சந்தேகநபர் குறித்த பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்திற்குப் பின்னர் சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளையும் தேடுதல் நடவடிக்கைகளையும் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
