வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்தை இனப் பிரச்சினையாக்க வேண்டாம்: யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர் ஒன்றியம் கண்டனம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற வெசாக் கூடு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அந்தச் சம்பவத்தை இன ரீதியான பிரச்சினையாக சித்தரிக்க வேண்டாம் என முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகப் பீட மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கள மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் நிகழ்வுக்கு தமிழ் மாணவர்களும் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்வை வெற்றிகரமாக நடத்த அனைவரும் இணைந்து செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு சிலரின் பொறுப்பற்ற செயலால் வெசாக் கூடு சேதமடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.
அதேவேளை, தனிப்பட்ட சிலரின் செயலுக்காக முழு தமிழ் மாணவர் சமூகத்தையும் குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், அத்தகைய குற்றச்சாட்டுகள் மாணவர்களுக்கிடையிலான நல்லுறவை பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், உண்மை நிலை தெளிவாகும் வரை வதந்திகள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும், பல்கலைக்கழகத்தில் நிலவும் நல்லிணக்க சூழலைப் பாதுகாக்க அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறும் மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
