யாழ். பல்கலைக்கழக வெசாக் கூடு சேதப்படுத்தல்: பல கோணங்களில் விசாரணை தீவிரம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இணைந்து அமைத்திருந்த வெசாக் கூடு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இதுவரை சம்பவம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறினார்.
எனினும், இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தைச் சேர்ந்த தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் இணைந்து நல்லிணக்கத்தின் அடையாளமாக இந்த வெசாக் கூடினை உருவாக்கியிருந்ததாகத் தெரியவருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், மாணவர்களுக்கிடையிலான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கும் நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயலா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவத்தின் உண்மை நிலை குறித்து விசாரணைகள் நிறைவடைந்து உத்தியோகபூர்வ அறிக்கை கிடைத்த பின்னர் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
.jpg)