நீர் கட்டண திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!


நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுமா இல்லையா என்பது தொடர்பான இறுதி மீளாய்வு எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நிரந்தர சேவைக்கு இணைந்துகொள்ளும் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணத்தில் எந்தவித அதிகரிப்பும் மேற்கொள்ளப்படாது என கடந்த மே 19 ஆம் திகதி அமைச்சரவை அறிவித்திருந்தது. தற்போதைய கட்டணங்கள் மூலம் சபையின் செயற்பாட்டு செலவுகளை சமாளிக்க முடியும் எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் மின்சாரக் கட்டணத்தில் ஏற்பட்ட உயர்வு, நீர் வழங்கல் சேவையின் செலவுகளில் சிறியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். எனினும், அதன் தாக்கம் குறைந்தளவிலேயே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனவரி முதல் ஜூன் 30 வரையிலான காலப்பகுதியில் நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக ஏற்பட்ட செலவுகள் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே நீர் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.