லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: கோட்டாபய ராஜபக்ஷ இணையவழி சாட்சியமளிக்க அனுமதி!


யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ இணையவழி (Online) மூலம் சாட்சியமளிக்க யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி, மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நடத்தத் திட்டமிடப்பட்ட போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனுவின் அடிப்படையில் விசாரணைகள் 2012 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வழக்கின் சாட்சியாளர் பட்டியலில் 2017 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இணைக்கப்பட்டதையடுத்து, நேரில் ஆஜராகி சாட்சியமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும், பாதுகாப்பு காரணங்களால் யாழ்ப்பாணத்திற்கு வர இயலாது என தெரிவித்து வந்த கோட்டாபய ராஜபக்ஷ, இணையவழி மூலம் சாட்சியமளிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார்.

அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த நீதிமன்றம், இன்றைய விசாரணையின் போது கோட்டாபய ராஜபக்ஷ இணையவழி ஊடாக ஆஜராகி தனது சாட்சியங்களை பதிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளது.