தீவிரமடைந்து வரும் டெங்கு பரவல்!


நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தின் நான்காம் நாள் இன்றாகும். இதன் கீழ் இன்று அனைத்து பொது இடங்களையும் சுத்தப்படுத்தும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது நிலவி வரும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை அடையாளம் காணப்பட்டிருந்த உயர் அபாய டெங்கு வலயங்களின் எண்ணிக்கை 74 இலிருந்து 84 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, மட்டக்களப்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக பராமரித்து, தேங்கிய நீர் காணப்படும் இடங்களை உடனடியாக அகற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.