வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்று மனித கடத்தல் வலையமைப்பில் சிக்கிய இலங்கையர்கள் - வெளியான பகீர் தகவல்!


வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற இலங்கையர்கள் மனித கடத்தல் வலையமைப்பில் சிக்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையர்களை கனடாவுக்கு அனுப்புவதாக கூறி, அவர்கள் எத்தியோப்பியாவுக்கு அனுப்பப்பட்டு, அங்கு செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களால் பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களை விடுவிக்க தலா 30,000 அமெரிக்க டொலர் கப்பம் கோரப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள கொழும்பு பிரதான நீதவான் அசங்க போதரகம, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனித வர்த்தகம், கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றில் தகவல் வெளியிட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.